இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு நெக்ஸான் இவி காரே முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த கார் நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் என இருவிதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இவற்றுடன் சேர்த்து டிகோர் இவி மற்றும் சமீபத்தில் அறிமுகமான டியாகோ இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களையும் டாடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவை தவிர இன்னும் சில எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணியிலும் அது களமிறங்கியிருக்கின்றது. இந்த மாதிரியான வேலையில், டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் கார்களில் அதிக தூரம் பயணிப்பது எப்படி என்பதற்கான வழிக்காட்டுதல்களை வழங்கியிருக்கின்றது.
எலெக்ட்ரிக் காரின் உச்சபட்ச ரேஞ்ஜ் திறனை பெறுவது எப்படி என்பதற்கான டிப்ஸை வீடியோவாக வெளியிட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ஜை அதிகரிப்பதற்கான முக்கியமான காரணிகளை டாடா மோட்டார்ஸ் வழங்கியிருக்கின்றது.
- ஈகோ மற்றும் பிற நார்மலான மோட்களை பயன்படுத்த வேண்டும்.
- வேகத்தை மணிக்கு 80 கிமீ வரையில் மட்டுமே மெயின்டெயின் செய்ய வேண்டும்.
- ஸ்போர்ட் மோடில் பயணிக்கும்போது நல்ல உற்சாகமான அனுபவத்தை எலெக்ட்ரிக் கார் வழங்கும். ஆனால், ரேஞ்ஜ் திறன் கடுமையாக பாதிக்கும்.
- ஒன் பெடல் டிரைவிங் மற்றும் லைட் ரைட் ஃபூட் யுக்தியைக் கையாள்வதன் வாயிலாகவும் ரேஞ்ஜை கணிசமாக அதிகரிக்க முடியும்.
- ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை பயன்படுத்துவதன் வாயிலாகவும் கணிசமான அளவு ரேஞ்ஜை அதிகரிக்க முடியும். இது வாகனத்தின் முடுக்கம் அல்லது பிரேக்கிங்கின்போது இயக்க ஆற்றலை, மின்சார ஆற்றலாக மாற்றும். இதனை அவ்வப்போது செய்வதன் வாயிலாக கணிசமாக பேட்டரி சார்ஜ் செய்யப்படும். இதன் வாயிலாக ரேஞ்ஜை கணிசமாக மீட்டெடுக்க முடியும்.
- அதேபோல் ஏசி-யை பயன்படுத்துவதிலும் சிக்கனம் தேவை. வாகனத்தின் ஏர் கண்டிஷனரை 24-26 டிகிரி செல்சியஸில் பயன்படுத்தும்போது அதன் மின்சார நுகர்வு கணிசமாக குறையும். இதன் மூலமாகவும் குறைந்த அளவுக்கு எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ஜ் திறனை அதிகரிக்க செய்ய முடியும்.
- இதேபோல் டயரில் போதுமான அளவு காற்றை வைத்திருப்பதன் வாயிலாகவும் நல்ல ரேஞ்ஜை எலெக்ட்ரிக் வாகனத்தில் பெற முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைக் கண்கானிக்கவே நவீன கால கார்களில் வாகன உற்பத்தியாளர்கள் டயர் பிரஷ்ஷர் மாணிட்டரை வழங்குகின்றனர்.
- இதேபோல், தேவையில்லாத அல்லது ஆஃப்டர் மார்க்கெட் (அங்கீகரிக்கப்படாத) மின்சாதன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. இவை அதிகளவில் பேட்டரியின் மின்சார திறனை உறிஞ்சக் கூடும்.
மேலே குறிப்பிட்ட வழிக்காட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக கணிசமான அளவு பேட்டரி ரேஞ்ஜை அதிகரிக்கச் செய்ய முடியும் என டாடா மோட்டார்ஸ் அதன் அதிகாரப்பூர்வ வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் மிக சமீபத்தில் டியாகோ இவி என்ற உலகின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காரின் அறிமுக விலை ரூ. 8.49 லட்சம் ஆகும். இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை. முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த குறைவான விலையில் டியாகோ இவி-யை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






