இந்த ஆண்டுக்குள் 2500+ ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஏத்தர் இலக்கு!

Highlights

  • க்ரிட் என்ற பெயரில் சார்ஜிங் நிலையங்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே செயல்படுத்தி வருகிறது
  • இந்த மையங்களின் எண்ணிக்கையை 2023ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக 2,500க்கும் அதிகமானதாக அதிகரிக்கும் திட்டத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உள்ளது.

திட்டங்கள்

நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவுவதில் புதிய மைல்கல்லை அடைந்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம், ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவும் விஷயத்தில் தனது எதிர்கால திட்டங்களையும் அறிவித்துள்ளது.

அந்த திட்டங்கள் என்னென்ன என்பதை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் முதன்மையான பிராண்ட்களுள் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி விளங்குகிறது. இன்னும் சொல்ல போனால், அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி முன்னிலை வகிக்கிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை கடந்த பல வருடங்களாகவே மெல்ல மெல்ல தான் வளர்ந்து வருகிறது. வேகமாக இந்த மாற்றம் நிகழாததற்கு முக்கிய காரணம் சார்ஜிங் வசதி போதிய அளவில் இல்லாமை ஆகும்.

 

ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடனும் சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை நீண்ட நேரத்திற்கு சார்ஜ் செய்யக்கூடியவைகளாக உள்ளன. இதனால் அன்றாடம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவதில் சில சமயங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரிச்செய்யும் விதமான ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் பல்வேறு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்காத நிறுவனங்கள் கூட சார்ஜிங் மையங்கள் உருவாக்கி அதன் மூலம் புதியதொரு வணிகத்தை துவங்க தயாராகி வருகின்றன.

1000+ மையங்கள்

அதேநேரம் சில இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக நேரடியாக சார்ஜிங் வணிகத்திலும் ஈடுப்பட்டு வருகின்றன. அத்தகைய நிறுவனங்களுக்கு மிக சிறந்த உதாரணம் ஏத்தர் எனர்ஜி ஆகும். க்ரிட் என்ற பெயரில் சார்ஜிங் நிலையங்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே செயல்படுத்தி வருகிறது. தற்போதுவரையில் மட்டும் 1000க்கும் அதிகமான ஏத்தர் க்ரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நாடு முழுவதும் உள்ளன.

 

2500 + மையங்கள்

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், 80 நகரங்களில் ஏத்தர் க்ரிட் நிலையங்கள் உள்ளன. தற்போது உள்ள 1000க்கும் அதிகமான க்ரிட் மையங்களின் எண்ணிக்கையை நடப்பு 2023ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக 2,500க்கும் அதிகமானதாக அதிகரிக்கும் திட்டத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உள்ளது. இதனை ஏத்தர் நிறுவனமே தனது அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது. இதன் மூலமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் பிரச்சனை இருக்காது என ஏத்தர் நிறுவனம் நம்புகிறது. ஏத்தர் எனர்ஜியின் க்ரிட் சார்ஜிங் நிலையங்கள் இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான பெரிய மற்றும் வேகமான சார்ஜிங் நெட்வொர்க் ஆக உள்ளன.

இந்தியாவின் 3வது நிறுவனம்

இருப்பினும் தற்போதைக்கு ஏத்தர் க்ரிட் நிலையங்கள் 40% முக்கிய டயர்-1 நகரங்களிலேயே உள்ளன. மீதி 60 சதவீதம் தான் டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் உள்ளன. கடந்த 2023 ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 12,419 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் நிறுவனம் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதன் மூலமாக இந்தியாவின் 3வது மிகப் பெரிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி உருவெடுத்துள்ளது. க்ரிட் சார்ஜிங் நிலையங்கள் மட்டுமின்றி, சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையையும் 2023 மார்ச் மாதத்திற்கு உள்ளாக, 100 நகரங்களில் 150 ஆக அதிகரிக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

உற்பத்தி அதிகரிப்பு

விற்பனை ஒருபக்கம் இவ்வாறு இருக்க, மறுப்பக்கம் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முனைப்புடன் உள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் கடந்த 2023 ஜனவரி மாதத்தில்தான் 1 லட்சம் என்ற மைல்கல்லை ஏத்தர் நிறுவனம் கடந்தது குறிப்பிடத்தக்கது.