அறிமுகமானது சேத்தக்கின் ப்ரீமியம் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

Highlights

  • பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய பிரீமியம் எடிசனை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
  • 2023 சேத்தக் பிரீமியம் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.52 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘சேத்தக்’ பெயருக்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். 1990ஆம் காலக்கட்டங்களில் பிரபலமாக இருந்த சேத்தக் பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் புதிய 2023ஆம் ஆண்டிற்காக புதியதாக சேத்தக் பிரீமியம் எடிசன் புத்துணர்ச்சியான பெயிண்ட் தேர்வில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உள்பட முக்கிய விபரங்களைப் பார்க்கலாம்.

விலை

2023 சேத்தக் பிரீமியம் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.52 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெயருக்கேற்ப புதிய சேத்தக் பிரீமியம் எடிசன் ஸ்கூட்டரில் பல்வேறு இடங்களில் பிரீமியம் தரத்திலான மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது ஊடக அறிக்கையிலும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், புதிய பிரீமியம் எடிசனுக்கு மேலும் சில புதிய பெயிண்ட் தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நிறங்கள்

மேட் கோர்ஸ் கிரே, மேட் கரீபியன் நீலம் மற்றும் சாடின் கருப்பு என்பவை அந்த புதிய பெயிண்ட் தேர்வுகளாகும். புதிய சேத்தக் பிரீமியம் எடிசனுக்கான முன்பதிவுகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏற்க துவங்கியுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்கூட்டரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.22 லட்சம் என்ற அளவில் உள்ளது.

 

கூடுதல் வசதி

அதனுடன் ஒப்பிடுகையில் புதிய பிரீமியம் எடிசனின் விலை ஆனது ஏறக்குறைய ரூ.30 ஆயிரம் அதிகமாகும். இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த புதிய சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன உள்ளது என கேட்டால், வண்ண நிறத்திலான பெரிய எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை பொருத்தப்பட்டுள்ளது. இது ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வண்ண நிறங்களில் வழங்கும். இதனுடன் ஸ்கூட்டரின் இருக்கை ஆனது இரு நிறங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்

பாடி கலரில் ரியர் வியூ மிரர்கள், சாடின் கருப்பு நிற க்ராப் ரெயில் மற்றும் அதற்கு பொருத்தமான பில்லன் ஃபுட்ரெஸ்ட் கேஸ்டிங், பிளிங்கர்ஸ் மற்றும் மைய ட்ரிம் பாகங்கள் உள்ளிட்டவை மற்ற அப்டேட்களாகும். ஸ்கூட்டரின் முன்பக்க ஹெட்லேம்ப்பை சுற்றிலும் கருப்பு நிறத்தில் கேசிங் பொருத்தப்பட்டுள்ளது. புதிய சேத்தக் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராக்கேஷ் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.