சிறந்த எலக்ட்ரிக் கார் விருதை வென்றது அட்டோ3!

பிஒய்டி அட்டோ3

சமீபத்தில் பிஒய்டி நிறுவனம் அட்டோ 3 எனும் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது. இது இந்தியாவில் வெளியான பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது கார் ஆகும். அதுவரை இ6 எனும் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனை செய்து வந்தது. இந் நிலையில், இந்த அட்டோ 3 எனும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரை பிஒய்டி அறிமுகப்படுத்தியது. இதுவும் அதிக பிரீமியம் வசதிகள் கொண்டதாகும். இதுவரை இந்த காரை 1,500 -க்கும் அதிகமான இந்தியர்கள் புக் செய்திருக்கின்றனர். ஏற்கனவே, பென்ஸ், ஆடி போன்ற சொகுசு கார்களை பயன்படுத்தி வரும் இந்தியர்களே இந்த காரை அதிகளவில் புக் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருது

இந்த அட்டோ 3, தற்போது ‘விஏபி எலெக்ட்ரிக் ஃபேமிலி கார் ஆஃப் தி இயர் 2023’ (VAB Electric Family Car of the Year 2023) விருதை வென்றிருக்கின்றது. 15 நடுவர்கள் அடங்கிய குழுவே இந்த விருதை எலெக்ட்ரிக் காருக்கு வழங்கியிருக்கின்றது. இந்த 15 நடுவர்களும் மோட்டார் வாகன உலகைச் சேர்ந்த கை தேர்ந்த பத்திரிக்கையாளர்கள் ஆவார்கள். இவர்களின் நற்மதிப்புடன் சேர்த்து 74 க்கும் அதிகமானோர் தங்களின் குடும்பத்திற்கு ஏற்ற காராக இந்த எலெக்ட்ரிக் கார் இருப்பதாக வாக்களித்திருக்கின்றனர்.

போட்டியில் பிஒய்டி அட்டோ 3 உடன் சேர்த்து ஃபோக்ஸ்வேகன், ரெனால்ட், சிட்ரோன், நிஸான், சியூப்ஆர்ஏ, எம்ஜி, ஐவேஸ், செரஸ் மற்றும் சாங்யாங் ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களும் இந்த போட்டியில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றின் தயாரிப்புகளைக் காட்டிலும் மிக சிறப்பானதாக பிஒய்டி அட்டோ3 காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே பல கட்ட ஆய்விற்கு பின்னர் அக்காருக்கு மிக சிறந்த விருது வழங்கப்பட்டுள்ளது. டிசைன், அதிக கம்ஃபோர்ட், தரம் என அனைத்திலும் இந்த கார் மிக தரமானது என்று மக்களால் பாராட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அதிக வாரண்டி, லாபம், அதிக இட வசதி, உயர் தர சிறப்பம்சங்கள் ஆகியவைகள் விஷயத்திலும் இந்த கார் நற் மதிப்பையே பெற்றிருக்கின்றது.

ஐந்து ஸ்டார்

பிஒய்டி ஏற்கனவே அதிக பாதுகாப்பான வாகனம் என்கிற விருதையும் வென்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பான கார் என்ற ரேட்டிங்கைப் பெற்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு விருதுகளை இந்த கார் வெகு விரைவில் வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 33.99 லட்சம். இந்த காரின் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்தே நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த நிலையிலேயே ஏராளமான இந்தியர்கள் எலெக்ட்ரிக் காரை புக் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

மைலேஜ்

இந்த காரில் ஓர் ஃபுல் சார்ஜில் 521 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 60.48 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை 80 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்டில் வாயிலாககூட சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் வாயிலாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 0 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 50 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும். இதேபோல், இக்காரை 2 ஏசி பாயிண்டிலும் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் சார்ஜ் செய்யும்போது முழு சார்ஜை எட்ட 10 மணி நேரங்களை அட்டோ 3 எடுத்துக் கொள்ளும்.

திறன்

இந்த மின்சார காரில் 201 எச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரையே பிஒய்டி பயன்படுத்தியிருக்கின்றது. இது வெறும் 7.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

வசதிகள்

இக்காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக கேபினை விரைவில் குளிர்விக்கக் கூடிய பவர்ஃபுல் ஏசி, வட்ட வடிவ ஸ்பீக்கர்கள், 12.8 அங்குல ரொட்டேட் செய்யும் வசதிக் கொண்ட திரை, பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், 5 அங்குல டிஜிட்ல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் பல ஏராளமான அம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பக்க கொலிசன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்டவையே பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.