2024 ஜனவரியில் வருகிறது ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். சிஇஓ தகவல்!

Highlights

  • சமீபத்தில் புதிய ஆக்டிவா ஸ்கூட்டரின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
  • அதில் ஹோண்டா நிறுவனத்தின் சிஇஓ அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் ஆகும் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

சிறப்பு அம்சங்களைக் கொண்ட புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஜனவரி 23 அன்று அறிமுகப்படுத்தியது. புதிய ஆக்டிவாவின் எச்-ஸ்மார்ட் வேரியண்டை அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக அது உருவாக்கி இருக்கின்றது. இந்த மாடலுக்கு  மட்டும் கார்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஸ்மார்ட் சாவி வசதியை ஹோண்டா வழங்கி இருக்கின்றது.

இது சாவியே இல்லாமல் டூ-வீலரை இயக்க அனுமதிக்கும். இத்தகைய தரமான ஸ்கூட்டராக ஆக்டிவாவை அப்டேட் செய்து, ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த வாகனத்தின் அறிமுக நிகழ்வில் கலந்துக் கொண்ட ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ-வுமான அட்சுஷி ஒகடா, யாரும் எதிர்பார்த்திராத ஓர் தகவலை வெளியிட்டார்.

 

எப்போது வெளியீடு?

அதன்படி ஹோண்டா எப்போது அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. 2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் ஹோண்டா அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பது அவர் நிகழ்ச்சியில் பேசியதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலிலேயே நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

 

திறன்

இது மணிக்கு 50 கிமீ வேகம் மற்றும் ஃபுல் சார்ஜில் 80 கிமீ முதல் 100 கிமீ வரையிலான ரேஞ்ஜ் திறன் கொண்டதாகவே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நகர்புற பயன்பாடு மற்றும் அலுவல் ரீதியான பயன்பாடுகளுக்கு என இந்த வாகனம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. எனவேதான் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைவான திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

போட்டி

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் விடா வி1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஃபுல் சார்ஜில் 165 கிமீ ரேஞ்ஜ் தரும் வாகனமாக உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதைவிட திறன் கொண்டதாகவே ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாராகிக் கொண்டிருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி இன்னும் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டம் போட்டு இருக்கின்றது. அது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என தெரிகின்றது.

 

புதிய பிளாட்பாரம்

அவற்றை புதிய பிளாட்பாரத்தில் ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வருகின்றது. குறிப்பாக, ஆக்டிவாவைக் காட்டிலும் அதிக வசதிகள் மற்றும் திறன்மிக்கதாக அதை நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. ஆக்டிவாவில் வழங்கப்படாத அம்சங்கள் பலவற்றையும் இந்த புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் மூலம் ஹோண்டா வழங்கும் எனக் கூறப்படுகிறது. போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் ரேஞ்ஜ் திறன், அதிக பவர்ஃபுல் மின் மோட்டார்கள் மற்றும் பன்முக நவீன கால அம்சங்கள் என எக்கச்சக்க அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

 

அம்சங்கள்

ஸ்வாப்பபிள் பேட்டரி பேக், செல்போன் இணைப்பு, வாகனத்தை லைவாக டிராக் செய்யும் அம்சம் உள்ளிட்டவையும் ஹோண்டாவின் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம். இதுபோன்று இன்னும் பல ஏராளமான அம்சங்கள் இதில் இடம் பெற இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தீவிரம்

ஹோண்டா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் முன்னரே, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுக்கும் பணியில் களமிறங்கி விட்டது. அந்தவகையில், ஹோண்டா நிறுவனம் அதன் மற்றுமொரு அங்கமான ஹோண்டா பவர் பேக் எனெர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்கீழ் பெங்களூருவில் உள்ள பகுதிகளில் பேட்டரி ஸ்வாப் மையங்களை அமைக்கும் பணியில் களமிறங்கி இருக்கிறது.