சார்ஜிங் ஸ்டேஷன்களை கண்டறிய இவி யாத்ரா செயலி அறிமுகம்!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான இவி சார்ஜிங் ஸ்டேஷன்களை கண்டறிய பிரத்தியேக மொபைல் அப் அறிமுகமாகியுள்ளது. இதில் சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்வதோடு, சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் ஏற்றுவதற்காக புக்கிங்கும் செய்து கொள்ளலாம். இது குறித்த விரிவான தெளிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

அரசு முயற்சி

இந்தியாவில் தற்போது மத்திய மாநில அரசுகள் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். பெட்ரோல் வாகனங்களில் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவித்து வருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் மாசுவை குறைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் காரணமாக ஏராளமான மானியங்களை வழங்கி வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதான ஈர்ப்பு மிக மெதுவாக தான் அதிகமாகி வருகிறது.

பிரச்சனை

இதற்கு முக்கியமான காரணம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான சந்தேகங்கள் மற்றும் பயம்தான். எலெக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல் டீசல் வாகனங்களை போல இல்லை. இன்றைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது, பெட்ரோல் வானகங்களில் பயணத்தின் போது பெட்ரோல் காலியாகும் நிலை வந்தால் பெட்ரோல் பங்க்களுக்கு சென்று பெட்ரோலை நிரப்பிக்கொண்டு பயணிக்கலாம். ஆனால் இது எலெக்ட்ரிக் வாகனங்களில் சாத்தியமே இல்லை.

சார்ஜிங் ஸ்டேஷன்கள்

இன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் முழு சார்ஜில் குறிப்பிட்ட அளவு தூரம் மட்டுமே பயணிக்கும் திறன் இருக்கிறது. அதை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும், பெட்ரோல் கார்கள் போல 5 நிமிடத்தில் முடியக்கூடிய வேலையில்லை. குறைந்த பட்சம் 45-50 நிமிடங்களாவது ஆகும். அதனால் எலெக்ட்ரிக் கார்கள் நீண்ட தூர பயன்பாட்டிற்கு பயன்படுத்த தயங்கி வருகின்றனர். இது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதே நேரத்தில் தற்போது இந்தியாவில் பெட்ரோல் பங்க்கள் இருப்பது போல் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்கள் எல்லாம் இந்தியாவில் இல்லை.

அறிமுகம்

தற்போது இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் கூட எங்கு இருக்கிறது என தெரியவில்லை. இது முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு இவி யாத்ரா என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த பிரச்சனையை முற்றிலுமாக தீர்த்து வைக்க இருக்கிறது. தேசிய ஆற்றல் சேமிப்பு தினமான டிசம்பர் 14ம் தேதி இந்த செயலியை இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு துவக்கி வைத்துள்ளார். எனர்ஜி எஃபிசியன்ஸி பியூரோ சார்பில் இந்த செயலி உருவாக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செயலி மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

பயன்கள்

இந்த செயலில் பொது சார்ஜிங் மையங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் சார்ஜிங் மையங்கள் குறித்த தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயலியை தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆகிய தளங்களுக்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இதில் சார்ஜிங் மையம் இருக்கும் இடம், மையத்தில் என்ன வகையான சார்ஜர்கள் இருக்கிறது போன்ற தகவல்களையும், சார்ஜிங் மையத்தில் எந்த நேரம் ஸ்லாட் இருக்கிறது, சார்ஜ் ஏற்ற எவ்வளவு கட்டணம் ஆகிய தகவல்களை இந்த ஆப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுமக்கள் இந்த தகவல்களை அவர்கள் செல்போன் ஆப் மூலம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறிப்பிட்ட சார்ஜிங் ஸ்டேஷனில் அவர்கள் சார்ஜ் செய்ய விரும்பினால் அதையும் இந்த ஆப் மூலமே புக்கிங் செய்து கொள்ள முடியும். இது மட்டுமல்ல சார்ஜிங் பாயிண்ட் ஆப்ரேட்டர்கள் தங்கள் மையங்களில் வழங்கும் பிற சேவைகள் குறித்தும் இந்த ஆப்பில் பதிவு செய்யலாம். இதன் மூலம் சார்ஜிங் செய்ய வருபவர்கள் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த ஆப்பை மக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.