பட்டி 25 இவி எலக்ட்ரிக் மொபட்டை ஓட்ட லைசென்ஸ், ஆர்சி புக் எதுவும் தேவை இல்லை!

பட்டி 25 இவி (Buddie 25 EV)

இந்தியாவில் கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவில் தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கும் புதிய மின்சார இருசக்கர வாகனங்களின் தேர்வை பலப்படுத்தும் விதமாக, ரிவேம்ப் மோட்டோ (Revamp Moto) எனும் புதிய நிறுவனம் அதன் புதிய எலெக்ட்ரிக் மொபட் ரக வாகனத்தை ரிவேம்ப் பட்டி 25 இவி (Buddie 25 EV) எனும் பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது. இந்த எலக்ட்ரிக் மொபட்டை ஓட்ட லைசென்ஸ், ஆர்சி புக் எதுவும் தேவை இல்லை!

புக்கிங்

மற்ற வாகனங்களை ஒப்பிடும்போது இந்த இருசக்கர வாகனத்தின் தோற்றம் சற்று மாறுபட்டதாக இருக்கிறது. இந்த வாகனத்திற்கான புக்கிங் பணிகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தள பக்கம் வாயிலாக விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதனை புக் செய்ய வெறும் ரூ. 999 இருந்தால் போதும். இந்த மிகக் குறைவான முன் தொகையிலேயே புக்கிங்குகள் ஏற்கப்பட இருக்கின்றன. இது மட்டும் இல்லை. இந்த வாகனத்தை மிகக் குறைவான விலையில் விற்பனைச் செய்யவும் ரிவேம்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது பட்டி 25 இவி வாகனத்தை வெறும் 66 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. புக்கிங் பணிகள் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி அன்றே நாடு முழுவதும் தொடங்கி விட்டது.

டெலிவரி

ரிவேம்ப், இந்த வாகனத்தின் டெலிவரி பணிகளை அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்க இருக்கிறது. ரிவேம்ப் நிறுவனம் இந்த வாகனத்தை முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாகவே உருவாக்கி இருக்கின்றது. இதன் உற்பத்தி பணிகள் மஹாராஷ்டிராவில் உள்ள தானே எனும் பகுதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. புதிய இருசக்கர வாகனத்தின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ரிவேம்ப் நிறுவனம் ஆரம்பித்து உள்ளது.

திட்டங்கள்

அந்தவகையில், வாடிக்கையாளர்கள் எளிதில் பட்டி 25 இவி-யை வாங்கும் விதமாக சில முன்னணி வங்கிகளுடன் கூட்டணியைத் தொடங்கி உள்ளது. குறிப்பாக இந்த மொபட் ரக மின்சார இருசக்கர வாகனத்தை ‘நோ காஸ்ட் இஎம்ஐ’ மூலம் வாங்கிக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன், இதற்கு இன்ஸ்டான்ட் லோனை வழங்கவும் ரிவேம்ப் மோட்டோ ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரு திட்டங்களும் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேட்டரி

பட்டி 25 இவி-யில் 48 V, 25 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த வாகனத்தை தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை. இது குறைவான வேகத்தில் இயங்கும் வாகனம் என்பதால் இந்த வாகனத்திற்கு பதிவெண் அவசியம் இல்லை. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இந்த அளவு குறைவான வேகம் கொண்ட வாகனங்களை இயக்க டிரைவிங் லைசென்ஸும் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இந்த இருசக்கர வாகனத்தை சாலையில் பயன்படுத்த எந்த விதமான அனுமதியோ அல்லது ஆவணங்களோ தேவைப்படாது.

2 இன் 1

பட்டி 25 இவி-யில் வழங்கப்பட்டிருக்கும் 48 V, 25 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் 45 நிமிடங்களே போதுமானது. இந்த இருசக்கர வாகனத்தை மாடுலர் யூடிலிட்டி பிளாட்ஃபார்மில் வைத்து நிறுவனம் கட்டமைத்துள்ளது. இந்த பிளாட்பாரத்தின் வாயிலாகவே இதனை டிரான்ஸ்ஃபார்மபிள் இவியாக ரிவேம்ப் வடிவமைத்துள்ளது. ஆம், பட்டி 25 இவி-யை தேவைப்படும்போது பொருட்களை ஏற்றிசெல்லும் வாகனமாக மாற்றிக் கொள்ள முடியும். இதனை வெறும் 30 செகண்டுகளிலேயே நம்மால் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கான கேரியர் அமைப்பு பின் பகுதியிலேயே வழங்கப்பட்டுள்ளது. இதில், பாக்ஸ், பெரிய பை என எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும். மேலும், இந்த வாகனத்தில் சுமார் 120 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை ஏற்றி செல்ல முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றுடன், ஸ்மார்ட் இணைப்பு மற்றும் மாடுலர், ஆட்டோ ஹெட்லேம்ப் உள்ளிட்ட நவீன கால தொழில்நுட்ப வசதிகளும் இந்த மின்சார மொபட்டில் வழங்கப்பட்டுள்ளன.