தானாக சார்ஜ் செய்து கொள்ளும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார்!

புதிதாக வெளியாக இருக்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரில் இடம் பெற இருக்கும் ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் தானாகவே சார்ஜ் செய்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டா நிறுவனம் வெகு விரைவில் அதன் இன்னோவா கார் மாடலை ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் டீசர் படங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. இந்த டீசர்களின் வாயிலாக இன்னோவா ஹைகிராஸ் காரில் இடம் பெற இருக்கும் அம்சங்களை டொயோட்டா உறுதிச் செய்து வருகின்றது.

ஹைபிரிட் தொழில்நுட்பம்

டொயோட்டா இன்னோவா இந்த நிலையிலேயே ஹைபிரிட் தொழில்நுட்பம் இடம் பெற இருப்பதையும், இந்த சிஸ்டம் தானாகவே காரின் இயக்கத்தின் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கின்றது. முன்னதாக இந்த தகவல்கள் வதந்தியாக மட்டுமே இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையிலேயே அதனை டொயோட்டா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதனால் இன்னோவா கார் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக இந்த காரில் டொயோட்டா நிறுவனம் அடாஸ் அம்சத்தை வழங்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் இன்னும் அதிகப்படியானோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அடாஸ் அம்சத்தை டொயோட்டாவின் வேறு எந்த காரிலும் நம்மால் காண முடியாது என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது.

அடாஸ் அம்சம்

அடாஸ் அம்சத்தை முதல் முறையாக இன்னோவா ஹைகிராஸ் காரிலேயே டொயோட்டா வழங்கியிருக்கின்றது. இந்த அடாஸ் அம்சத்தின் வாயிலாக தானாக பிரேக் பிடித்தல், விபத்தைத் தவிர்த்தல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த அம்சங்கள் அனைத்தும் கூடுதலாக வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸில் வழங்க இருக்கின்றது. இதுதவிர பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீமியம் அம்சங்களும் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன. இதுதவிர, பெரிய க்ரில், எல்இடி ஹெட்லேம்ப், பகல் நேரத்தில் ஒளிரும் மின் விளக்குகள் உள்ளிட்டவையும் புதிய இன்னோவா ஹைகிராஸ் காரில் இடம் பெற உள்ளன.

வெளியீட்டு தேதி

டொயோட்டா நிறுவனம் இந்த காரை தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா க்ரிஸ்டா உடன் இணைந்தே புதிய இன்னோவா ஹைகிராஸ் காரையும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இது வரும் நவம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கின்றது. இது என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. அறிமுக நாளின்போதே இதுகுறித்த தகவல் வெளியிடப்பட இருக்கின்றன.

அதேபோல், என்ன மாதிரியான மோட்டார் இக்காரில் பயன்படுத்தப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரமும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளையில், 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த ஸ்ட்ராங் ஹைபிரிட் வசதிக் கொண்ட இன்னோவா ஹைகிராஸில் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த தகவல் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்க, மறுபக்கம் 1.5 லிட்டர் மோட்டாரிலேயே இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

முன்பதிவு

இவ்வாறு அடுக்கடுக்காக இக்கார் பற்றிய தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், டொயோட்டா நிறுவனத்தின் டீலர்கள் சிலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னரே இன்னோவா ஹைகிராஸுக்கான புக்கிங்குகளை ஏற்க தொடங்கியிருக்கின்றனர். ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் ப்ரீ புக்கிங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.