ஷாவ்மி உருவாக்கும் எலக்ட்ரிக் கார்! எப்போ வருது தெரியுமா?

[hightlights]

  • ஷாவ்மி நிறுவனம் உருவாக்கி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
  • நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் வேறு நிறுவனங்களின் கார் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதைப் போல் காட்சி அளிக்கிறது.
  • [/hightlights]

 

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் செல்போன் உற்பத்தி நிறுவனமான ஷாவ்மி (Xiaomi),  ஸ்மார்ட் போன் மட்டுமின்றி  பல்வேறு  பொருட்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், நிறுவனம் ஏற்கனவே ஸ்மார்ட் வாட்ச், ஏர் ப்யூரிஃபையர், எல்இடி டிவி, புரஜெக்டர், வேக்யூம் க்ளீனர், ப்ளூடூத் ஸ்பீக்கர், இன்டர்நெட் ரவுட்டர், பேக்-பேக்குகள், இயர்போன், இயர்பட்ஸ், எல்இடி மின் விளக்கு, சூட்கேஸ், செக்யூரிட்டி கேமிரா உள்ளிட்ட எக்கசக்க வீட்டு உபயோக பொருட்களை அது தயாரித்துக் கொண்டிருக்கின்றது.

 

எலக்ட்ரிக் கார்

இவற்றுடன் சேர்த்து நிறுவனம் மின்வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இ-பைக்குகள் சீனா போன்ற குறிப்பிட்ட நாடுகளில் விற்பனையாகி வருகிறது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தைத் தொடர்ந்து அந்நிறுவனம் மின்சார கார் உற்பத்தி பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் வெகு விரைவில் உலகளவில் வெளியிடப்பட இருக்கிறது. தற்போது ஷாவ்மியின் எலெக்ட்ரிக் காரின் படங்கள் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது.

 

எம்எஸ் 11

ஷாவ்மி எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஷாவ்மி நிறுவனம் எம்எஸ் 11 (Xiaomi MS11) எனும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணியிலேயே ஈடுபட்டு வருகின்றது. இதன் படங்களே இணையத்தின் வாயிலாக கசிந்திருக்கின்றது. உற்பத்திக்கு தயாராக இருக்கும் ஷாவ்மி எம்எஸ்11-இன் படங்களே இணையத்தில் வெளியாகி உள்ளன. இது அதிகாரப்பூர்வ வெளியீடு இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

தோற்றம்

இந்த படங்களை வைத்து பார்க்கையில் ஷாவ்மி தனது முதல் எலெக்ட்ரிக் காரை பிஒய்டி நிறுவனத்தின் சீல் எலெக்ட்ரிக் கார் மாடலையும், போர்ஷேவின் டேகேன் கார் மாடலையும் தழுவி உருவாக்கப்பட்டிருப்பதைப் போல் காட்சியளிக்கிறது. அதேவேளையில் சில மாற்றங்களையும் இந்த ஷாவ்மியின் எம்எஸ் 11 எலெக்ட்ரிக் காரில் நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, அதிகப்படியான கட்டுமஸ்தான பாடி பேனல்களை நம்மால் இதில் காண முடியவில்லை. தொடர்ந்து அலங்கரிப்பு விஷயத்திலும் கணிசமான மாற்றங்களை நம்மால் காண முடிகின்றது. இதன் அடிப்படையில் சில தனித்துவமான அம்சங்களையும் வழங்கி இருக்கின்றது.

 

வடிவமைப்பு

ஹெட்லைட்டுக்கு கீழ் பகுதியில் ஏர் ஸ்கூப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் வாயிலாகவே பிரேக்குகளுக்கான காற்று கடத்தப்படும். பிரேக்குகளில் ஏற்படும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர சி வடிவ அணிகலன்கள் முன்பக்க பம்பரில் வழங்கப்பட்டு உள்ளது. இவை அனைத்துமே ஷாவ்மி எம்எஸ்11 எலெக்ட்ரிக் காருக்கு தனித்துவமான தோற்றத்தையும், கவர்ச்சியான லுக்கையும் வழங்கும் வகையில் இருக்கின்றன. ஷாவ்மி எலெக்ட்ரிக் கார் இருந்தாலும் அட்டகாசமா இருக்கு இந்த கார்களில் ஃப்ளஷ் ரக ஹேண்டில்களே அனைத்து கதவுகளிலும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், மேற்கூரை முழுவதும் ஒற்றை பேனல் ரக கிளாஸே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதை அடுத்து டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களில் காணப்படுவதைப் போன்ற அலாய் வீல்களும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

 

சிறப்பம்சங்கள்

இதுதவிர, வால்வோ எக்ஸ்90 காரில் இடம் பெற்றிருப்பதைப் போல லிடார், ரேடார் போன்ற சென்சார்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது பாதுகாப்பான பயணத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும். இந்த காரின் வெளியீடு நாள் பற்றிய விபரம் தெரியவில்லை. அதேவேளையில், 2024 ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்குள் இதன் அறிமுகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஷாவ்மி நிறுவனம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் மின்வாகன தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றது. அடுத்த பத்து வருடங்களில் மின் வாகன சந்தையில் பெரும் புரட்சியை செய்யும் நோக்கில் இந்த பணியில் அது களமிறங்கி இருக்கின்றது. ஷாவ்மி மட்டுமின்றி லெனோவோ, ஆப்பிள், ஹூவாய், கூகுள் மற்றும் சோனி ஆகிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் மின் வாகன தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.